டிஜிட்டல் கைது: மோசடி கும்பலிடம் ரூ. 7 கோடியை இழந்த முதியவர்

முதியவரிடம் ரூ. 7 கோடி மோசடி செய்த டிஜிட்டல் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளதாகவும் முதியவரிடம் கூறியுள்ளனர்.
அந்த பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் சிறை செல்ல நேரிடும் என மிரட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்காக தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பும்படி கூறியுள்ளனர்.
இதை நம்பிய முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 கோடி பணத்தை அந்த மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இது குறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளனர். அதேவேளை, மேலும் ரூ. 1 கோடி வங்கி கணக்கில் செலுத்தும்படி மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் தான் டிஜிட்டல் கைது முறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரிடம் ரூ. 7 கோடி மோசடி செய்த டிஜிட்டல் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






