வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் சி.எம்.எஸ்-03 நிலை நிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர்


வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் சி.எம்.எஸ்-03 நிலை நிறுத்தப்பட்டது -  இஸ்ரோ தலைவர்
x

15 வருடத்திற்கு தொலை தொடர்பை உறுதி செய்யும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் மாலை 5.26 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சிஎம்எஸ்-03 உள்ளது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இஸ்ரோ மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பிற்கு இந்த சாதனை சிறந்த உதாரணம்.எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.

எல்விஎம் 3 ராக்கெட் மூலம் 100% வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவில் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றியில் நாம் அனைவருமே பங்கெடுத்து கொண்டாட வேண்டும். செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. வானிலை நமக்கு எதிரானதாகவே இருந்தது. இருந்தபோதும் இந்த வெற்றி இஸ்ரோவில் உள்ள ஒவ்வொருவரின் தீவிர முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. 15 வருடத்திற்கு தொலை தொடர்பை உறுதி செய்யும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story