சக வீரரால் சுடப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் - கோர்ட்டு உத்தரவு


சக வீரரால் சுடப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் - கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2025 3:40 PM IST (Updated: 25 July 2025 6:01 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதிய கோரிக்கை குறித்து பரீசிலனை செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் ஆயுதப்படை தீர்ப்பாயம் பரிந்துரை செய்தது.

சண்டிகர்,

கடந்த 1991-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி, காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் 'ஆபரேஷன் ரக்ஷக்' என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் சக வீரரால் தவறுதலாக சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, உயிரிழந்த ராணுவ வீரரின் தாய் ருக்மணி தேவி, தனது மகனுக்கு ராணுவத்தினருக்கு வழங்கப்படும் தாராளமயமாக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள்(Liberalised Family Pension) வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஆயுதப்படை தீர்ப்பாயத்திடம்(Armed Forces Tribunal) மனு தாக்கல் செய்தார்.

தாராளமயமாக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள் என்பது சாதாரண குடும்ப ஓய்வூதியத்தை விட கூடுதல் சலுகைகளை கொண்டது ஆகும். சம்பவம் நடந்து நீண்ட காலம் ஆனது என்பது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி ருக்மணி தேவியின் ஓய்வூதிய கோரிக்கை ஏற்க மறுத்த ஆயுதப்படை தீர்ப்பாயம், இது குறித்து பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி பரிந்துரை செய்தது.

இதனை எதிர்த்து பஞ்சாப் ஐகோர்ட்டில் இந்திய மனுதாரர்கள் சங்கம்(Petitioners Union of India) வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவால், நீதிபதி தீபக் மன்சந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனுவை தாக்கல் செய்ய நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்ற வாதம் சரியானது அல்ல என்று கோர்ட்டு கருதுகிறது.

நாட்டிற்கு சேவை செய்த ஊழியருக்கு ஓய்வூதியம் என்பது என்பது ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய தொடர்ச்சியான செயல்பாடு ஆகும். போரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பலன்கள், சக ஊழியரால் சுடப்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படுவதை எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது" என்று தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story