ராஜஸ்தானில் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ராஜஸ்தானில் உள்ள 11 மாவட்டங்களில் 15 புதிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இன்று நடைபெற்ற விழாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் வழங்கல், மின்சாரம், சாலை மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கப்பட்ட திட்டங்களில் மஹி-பன்ஸ்வாரா அணுமின் நிலைய திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த அணுமின் நிலையம் 2,800 மெகாவாட் திறனுடன் ரூ.42,000 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.
இது தவிர பைகானேரில் 590 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம், ஜெய்சால்மர், பார்மர், சிரோஹி, நாகோர் மற்றும் பைகானேரில் உயர் திறன் கொண்ட மின்சார வயர்கள், பன்ஸ்வாரா, உதய்பூர், துங்கர்பூர், சிகார் மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 15 புதிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு புதிய மேம்பாலங்கள், பனாஸ் ஆற்றின் மீது ஒரு பாலம் மற்றும் பரத்பூரில் அடல் பிரகதி பாதை திட்டத்தின் கீழ் 119 சாலைகள், பைகானேர் மற்றும் ஜெய்சால்மரில் மூன்று புதிய துணை மின்நிலையங்கள் ஆகியவற்றையும் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
அதோடு பைகானேர்-டெல்லி கான்ட் மற்றும் ஜோத்பூர்-டெல்லி கான்ட் வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில்கள் மற்றும் உதய்பூர்-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றின் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.






