பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்? டிரம்பை சந்திக்க வாய்ப்பு

அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி,
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் படி கடந்த 7-ந்தேதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்த செயல்பாடுகளால் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐநா கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பதற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபை செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. உலகத் தலைவர்களின் விவாதம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறுகிறது. இதில், இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஐ.நா. பொது விவாதத்தில் உரையாற்ற உள்ளனர்






