பி.எம்.ஸ்ரீ திட்டம் அரசியல் கலப்பு இல்லாமல் ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும்: சுரேஷ் கோபி

நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கட்டும் என்று சுரேஷ் கோபி கூறினார்.
திருவனந்தபுரம்,
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் இணைய கேரள அரசு மறுத்து வந்தது. இதற்கிடையே தற்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்து உள்ளது.
இதுகுறித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனளிக்கும் திட்டமே பி.எம்.ஸ்ரீ திட்டம். இதனை கேரள அரசு தற்போது ஏற்று கொண்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிது காலதாமதம் ஆனாலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கேரளா ஏற்றுக்கொண்டது, எதிர்கால மாணவ சமுதாயத்துக்கு செய்த மிகப்பெரிய சேவையாகும். இதனால் பயன் பெறுபவர்கள் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அரசியல் கலப்பு இல்லாமல், தனிப்பட்ட நபர்களுக்கு ஆதாயம் இல்லாமல், ஏழை மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் என்பதை மனதில் வைத்து மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை கேரளா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது. 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட முழு உண்மை இல்லாத பாடத்திட்டங்களை விட, நமது குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரசுக்கும் சில உரிமைகள் உள்ளது. இதேபோல பா.ஜனதா கட்சிக்கும், மத்திய அரசுக்கும் சில உரிமைகள், கடமைகள் உள்ளது. ஆனால், இறுதியாக மாணவ-மாணவிகளின் நலன் மட்டுமே முக்கியமானது. இதன் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்கட்டும். கல்வி சூழல் மேம்படட்டும். நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.






