உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தை திருமண மண்டபம் போல் அலங்கரித்த காவலர்கள் - கடிந்து கொண்ட டி.ஐ.ஜி.

டி.ஐ.ஜி. தங்களை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார் என்று காத்திருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள கூர்ஜா காவல் நிலையத்திற்கு ஆய்வு பணிக்காக டி.ஐ.ஜி. கலாநிதி வர இருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தங்கள் காவல் நிலையத்திற்கு வரும் டி.ஐ.ஜி.யை உற்சாகமாக வரவேற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று காவலர்கள் திட்டமிட்டனர்.
இதன்படி, காவல் நிலையத்தின் முகப்பு பகுதியில் பந்தல் அமைத்து, வண்ண மலர்களை தொங்கவிட்டு, திருமண மண்டபம் போல் காவல் நிலையத்தை அவர்கள் அலங்கரித்தனர். இதனை தொடர்ந்து அந்த காவல் நிலையத்திற்கு டி.ஐ.ஜி. கலாநிதி வந்து சேர்ந்தார். அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்து டி.ஐ.ஜி. தங்களை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார் என்று காத்திருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காவல் நிலையத்தை திருமண மண்டபம் போல் அலங்கரித்து வைத்திருந்த காவலர்களை பார்த்து அவர் கடும் கோபம் கொண்டார். இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட டி.ஐ.ஜி., உடனடியாக அனைத்து அலங்காரங்களையும் அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவலர்கள் அலங்காரங்களை அவசர அவசரமாக அகற்றி அப்புறப்படுத்தினர்.






