புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்

புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலையில் பார் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரபாண்டியன். இவரது மகன் மோஷிக் சண்முகபிரியன் (வயது 22). சென்னை அடுத்த செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் நண்பரான மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் (23) என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 18-க்கும் மேற்பட்டோருடன் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு புதுவைக்கு வந்தனர்.
அவர்கள் மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி. ‘ரெஸ்டோ’ பாருக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினர். அதிகாலை வரை கொண்டாட்டம் நீடித்ததால் மதுபோதையில் இருந்த கல்லூரி மாணவர்களை பவுன்சர்கள் வெளியேறும்படி கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரெஸ்டோ பார் ஊழியர்கள் கத்தியால் குத்தியதில் மோஷிக் சண்முகபிரியன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஷாஜனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ரெஸ்டோ பார் ஊழியர் வில்லியனூரை சேர்ந்த அசோக்ராஜ் (26), ரெஸ்டோ பார் உரிமையாளர் முத்தியால்பேட்டை ராஜ்குமார் (31), கேசியர் முத்தியால்பேட்டை சஞ்சய்குமார் (21), ஊழியர்கள் பூபதி என்ற டேவிட் (22), கடலூரை சேர்ந்த அரவிந்த் (29), விழுப்புரத்தை சேர்ந்த பவுன்சர் புகழேந்தி (28) ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.
அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று இரவு அவர்கள் 6 பேரும் புதுவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையான மோஷிக் சண்முகபிரியன் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல் வைத்ததுடன், அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு கலால் துறை தற்காலிகமாக ரத்து செய்து சீல் வைத்துள்ளது.






