பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் குறித்து ராகுல் காந்தி கருத்து

கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல உள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி, குக்கி ஆகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மிசோரம், மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது: நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வரும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி தற்போது செல்வது நல்லதுதான். ஆனால், தற்போது முக்கிய பிரச்சினை வாக்கு திருட்டுதான். மராட்டியம், அரியானாவில் மக்கள் அளித்த தீர்ப்புகள் திருடப்பட்டுள்ளன. எல்லா பக்கமும் வாக்கு திருட்டு குறித்துதான் மக்கள் பேசுகிறார்கள்” என்றார்.






