தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி விடுதலை

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி,
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுயியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






