தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்


தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Sept 2025 6:40 AM IST (Updated: 30 Sept 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:- வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர மறுஆய்வுக்கு உட்படுத்தும் மத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வாக்காளர்களை வேறுபடுத்தும் ஒரு தந்திரமான செயல்பாடு. இது கவலை அளிப்பதாக உள்ளது. பீகாரில் தீவிரமான வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறை இத்தகைய கவலைகளை உறுதிப்படுத்துகிறது. நாடு முழுவதும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகமும் உள்ளது.

தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது, தேர்தல் நெருங்கி வரும் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதே செயல்முறை அவசரமாக அறிமுகப்படுத்தப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் நியாயமில்லை. நீண்டகால தயாரிப்பு மற்றும் ஆலோசனை தேவைப்படும் இதுபோன்ற ஒரு செயல்முறைக்கு அவசரப்படுவதால், தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுகிறது.கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளன. அதன் பிறகு உடனடியாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். இந்த வேளையில் அவசரமாக இதனை அமல்படுத்துவதில் உள்நோக்கம் உள்ளது.

இதற்கு முன்பாக, 2002-ம் ஆண்டு கேரளாவில் வாக்காளர் பட்டியலில் தீவிர மறு சீர்திருத்தம் நடந்தது. தற்போது அதுபோல் நடத்துவது அறிவியல் பூர்வமாக சாத்தியமற்றது. இத்தகைய விதி காரணமாக சிறுபான்மையினர், பட்டியலினம், பழங்குடியினர், பெண்கள் மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குடியுரிமை பெறாத வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் லத்தீப், ஷம்சுதீன், விஸ்வநாத், மொய்தீன், சித்திக், நஜீப் காந்தபுரம் ஆகியோர் கொண்டு வந்த திருத்தங்களுடன் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story