விமான விபத்து குறித்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம்: விமான போக்குவரத்து மந்திரி

ஆமதாபாத் விமான விபத்து குறித்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என மத்திய மந்திரி ராம் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆமதாபாத் விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு ஆணையம் வெற்றிகரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஏ.ஏ.ஐ.பி-யையும், அதன் அதிகாரிகள் செய்யும் வேலையையும் நான் முழுமையாக நம்புகிறேன்.
முன்பெல்லாம் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியானது வெளிநாடுகளுக்கு சோதனைக்காக அனுப்பப்படும். முழு கருப்பு பெட்டியை இந்தியாவிலேயே வைத்து சோதிப்பது இதுவே முதல்முறையாகும். அதனை அவர்கள் சீரிய முயற்சி எடுத்து மேற்கொண்டுள்ளனர். எனவே இது நமக்கு மிகப்பெரிய வெற்றியாகும்" என்றார்.மேலும் அவர், "விமான விபத்து புலனாய்வு ஆணையம் பொதுமக்களுக்கும், வெளிநாட்டு ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதவாது, இந்த சம்பவத்தில் யூகங்கள் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க வேண்டாம். பத்து குறித்தான இறுதி அறிக்கை வரும் வரை எந்த பொய்யான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. விபத்தின் முழு அறிக்கைக்காக நானும் காத்திருக்கிறேன்" என்றார்.
குஜராத்தில் 260 பேரின் உயிரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதல் கட்ட ஆய்வறிக்கை வெளியனது. இதில், விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் வேண்டுமென்றே 'ஆப்' செய்து இருந்ததும், இதுகுறித்து விமானிகள் அறையில் (காக்பிட்) முன்னரே விமானிகள் கேள்வி எழுப்பியதும் பதிவாகி இருந்தது. இதனால் இந்த விபத்து மனித தவறுகளால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.






