ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

அனில் அம்பானிக்கு தற்போது 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
Published on

புதுடெல்லி,

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.17 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அனில் தலைமையிலான குழும நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 24-ம் தேதி சோதனை நடத்தினர். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தினர். அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை  ரூ,7,500 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது. அடுத்த கட்டமாக மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று, அனில் அம்பானிக்கு இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 14-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com