கொள்கைகளையே ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது; அரசியல் கட்சியையோ, தனிநபரையோ அல்ல: மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். ஓர் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பகவத் இன்று கூறினார்.
பெங்களூரு,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கூறும்போது, சமூக ஒற்றுமைக்காக சங்கம் பாடுபடுகிறது. அரசியலோ பிரிவினையை கொண்டது. நாங்கள் கொள்கைகளையே ஆதரிக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதனை பா.ஜ.க. செய்தது. அதனால் அவர்களை நாங்கள் ஆதரித்தோம். இதுவே காங்கிரஸ் கட்சியே இதனை செயல்படுத்தியிருந்தால், நாங்கள் அவர்களையும் ஆதரித்திருப்போம் என்றார்.
இதேபோன்று, கர்நாடக அமைச்சரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்கிறோம் என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது? என்றும் பதிவு செய்யப்படாத அமைப்பு ஒன்றின் தலைவர் உயரிய பாதுகாப்பினை பெறுவது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார். அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பகவத், ஆர்.எஸ்.எஸ். 1925-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதனால், ஆங்கில அரசிடம் நாங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். நாடு விடுதலையடைந்த பிறகு, அமைப்பாக அங்கீகாரம் பெற்றோம். இந்திய அரசும் பதிவை கட்டாயமாக்கவில்லை. பதிவு செய்யப்படாத தனியமைப்புகளை கூட சட்டம் அங்கீகரிக்கிறது.
நாங்கள் அதுபோன்றதோர் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளோம், நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரி செலுத்துகிறோம். 3 முறை தடை செய்யப்பட்டோம், ஒவ்வொரு முறையும் கோர்ட்டு எங்கள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்கி அங்கீகரித்தது. எங்கள் அமைப்புக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம் என கூறிய அவர், நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். ஒரு தனிநபரையோ, ஒரு கட்சியையோ ஆதரிக்கவில்லை என்று கூறினார்.






