புதினின் இந்திய பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எரிபொருள் அனுப்பிய ரஷியா

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எரிபொருள் பெறுவதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
புதுடெல்லி,
ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி வைத்தார். இந்த சூழலில், புதினின் இந்திய பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷியா எரிபொருள் அனுப்பியுள்ளது.
கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணு மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. அங்கு 2 உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 4 உலைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 3-வது உலைக்கான அணு எரிபொருளை ரஷியாவின் அணுசக்தி கழகமான ரோசட்டோம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சரக்கு விமானத்தில் மேற்படி எரிபொருள் நேற்று முன்தினம் இந்தியா வந்தது. ரஷியா அனுப்பியுள்ள இந்த எரிபொருள் 3-வது உலையில் நிரப்பப்படுகிறது.
இந்த உலைக்காக 7 விமானங்களில் எரிபொருள் பெறுவதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. அதில் முதல் விமானம் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான எரிபொருளும் ரஷியா அனுப்பி இருப்பது தற்செயல் நிகழ்வாக அமைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






