வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் ரஷியா பயணம்


வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் ரஷியா பயணம்
x

இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டெல்லி,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

மேலும், இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் என்று டிரம்ப் விமர்சித்தார். அதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றார். அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பு முகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு உறவு, உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தியாவுக்கு வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் ரஷியா செல்கிறார். அமெரிக்காவுடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2 நாட்கள் பயணமாக வரும் 20ம் தேதி ரஷியா செல்லும் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, உக்ரைன் போர், கச்சா எண்ணெய் கொள்முதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

1 More update

Next Story