முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல்..ஆனால் நேரு அனுமதிக்கவில்லை - பிரதமர் மோடி பேச்சு

காங்கிரசின் தவறு காரணமாக இந்தியா பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.
அகமதாபாத்,
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 597 அடி உயர சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது வல்லபாய் படேலின் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. பின்னர், பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
வரலாற்றை எழுத நேரத்தை வீணாக்கக்கூடாது, ஆனால் வரலாற்றை உருவாக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார். இந்தியாவை ஒன்றிணைப்பதன் மூலம் அவர் வரலாற்றைப் படைத்தார். இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கவேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பணி சாத்தியமற்றது என்று கருதப்பட்ட நிலையில் அந்த பணியை சர்தார் படேல் செய்து காட்டினார். மற்ற சமஸ்தானங்களை போலவே முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதனை அனுமதிக்கவில்லை. படேல் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதை நேரு தடுத்தார். இதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. தனி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. தனிக்கொடி வழங்கப்பட்டது. 370 பிரிவை நீக்கியதின் மூலம் காஷ்மீர் இன்று இந்தியாவுடன் ஒன்றுபட்டுள்ளது.காங்கிரசின் தவறு காரணமாக இந்தியா பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் வகுத்த கொள்கைகள் அவர் எடுத்த முடிவுகள் புதிய வரலாற்றை உருவாக்கியது.
அவருக்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வை மிகவும் முக்கியமானது. அவரது தொலைநோக்கு பார்வையை நாங்கள் நிறைவெற்றி காட்டுவோம். இன்று கோடிக்கணக்கான மக்கள் ஒற்றுமைக்கான சபதம் எடுத்துள்ளனர். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் செயல்களை நாங்கள் ஊக்குவிப்போம். நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் ஒவ்வொரு சிந்தனையும் அல்லது செயலையும் ஒவ்வொரு குடிமகனும் புறக்கணிக்க வேண்டும், இது நம் நாட்டின் காலத்தின் தேவையாகும்.
சர்தார் படேல் வகுத்த கொள்கைகள், அவர் எடுத்த முடிவுகள் புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. ஊடுருவலுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் வலிமை காட்டப்பட்டுள்ளது. இந்தியாவால் எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்க முடியும் என்ற தெளிவான செய்தியை ஆபரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தி உள்ளது. இதை உலகமும் பார்த்து விட்டது. பாகிஸ்தானும் தீவிரவாதத்தை கையாள்பவர்களும் இந்தியாவின் உண்மையான பலம் என்ன என்பதை இப்போது அறிந்தி ருக்கிறார்கள். படேலின் சுயமரியாதை மற்றும் ஒன்றுபட்ட இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை காங்கிரஸ் மறந்துவிட்டது. 2014-ஆண்டுக்கு முன்பு வரை நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை தகர்த்தனர்.
நாங்கள் நக்சலைட்டுகளை ஒடுக்குவதில் உறுதியாக செயல்பட்டோம். முன்பு 125 மாவட்டங்கள் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டன. தற்போது 11 மாவட்டங்களில் மட்டுமே நக்சலைட்டுகளால் பாதிப்பு உள்ளது. இதன் மூலம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. அண்டை நாட்டினரின் ஊடுருவல் இந்தியாவின் ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வாக்கு வங்கிகளுக்காக முந்தைய அரசுகள் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் கொண்டுவிட்டுள்ளன.
ஊடுருவல்காரர்களுக்காக போராடுபவர்கள் நாடு பலவீனம் அடைவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருந்தால் ஒவ்வொரு குடிமகனும் ஆபத்தில் உள்ளனர் என்றே அர்த்தம். இந்தியாவில் சட்ட விரோதமாக வசிக்கும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இந்தியாவில் கருத்துக்களின் பன்முகத் தன்மை மதிக்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மன வேறுபாடுகள் இருக்கக் கூடாது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






