கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு: எஸ்.ஐ.டி கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
புதுடெல்லி,
வக்கீல் ரோகித் பாண்டே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கர்நாடக மாநிலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி இதனை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேறுறு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள் மனுதாரரின் வக்கீலின் வாதத்தை நாங்கள் கேட்டோம். பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. மனுதாரர் தேர்தல் கமிஷனை அணுகி தனது மனுவை தாக்கல் செய்யலாம் என கூறினர்.
அதற்கு வக்கீல் ரோஹித் பாண்டே தரப்பில், “மனுதாரர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று வாதிடப்பட்டது.மனுதாரர் மனுவை தீர்மானிக்க தேர்தல் கமிஷனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
டெல்லியில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பெங்களூரு மத்திய மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்தது. இந்த சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது” என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






