எம்.பி.பி.எஸ். மாணவி எடுத்த விபரீத முடிவு: தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார்


எம்.பி.பி.எஸ். மாணவி எடுத்த விபரீத முடிவு: தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார்
x

புனே மருத்துவ கல்லூரி விடுதியில் எம்.பி.பி.எஸ். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புனே,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். மேலும் கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் சக மாணவிகள் 2 பேருடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வெகுநேரம் ஆகியும் மாணவி விடுதி அறைக்கு திரும்பவில்லை. இதனால் மாணவியுடன் தங்கியிருந்த தோழிகள் அவரை செல்போனில் தொடர்புகொண்டனர். ஆனால் மாணவி போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் மாணவி காணாமல் போனதாக புகார் அளிக்க போலீசாரை அணுகினர்.

இதற்கிடையே அந்த விடுதியில் உள்ள மற்றொரு அறையில் காணாமல் போன மாணவி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதை அந்த அறையில் தங்கி இருந்த மற்றொரு மாணவி கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதுகுறித்து உடனடியாக விடுதி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் மாணவி, தான் மனநல சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களை பற்றி போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story