தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை

தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை கொன்று உடல்கள் புதைக்கப்பட்டதாக அங்கு தூய்மை பணியாளராக வேலை பார்த்த சென்னையா பகீர் தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் அவர் மண்டை ஓடுடன் சென்று வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக எஸ்.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், பொய்யான தகவலை கூறியதாக சென்னையாவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் தொடர்புடையதாக கிரீஷ் மட்டன்னவர், மகேஷ் திமரோடி, ஜெயந்த், விட்டல் கவுடா ஆகியோரிடம் எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் பலமுறை எஸ்.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் 4 பேரின் தரப்பிலும் கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், தர்மஸ்தலா வழக்கில் மனுதாரர்களுக்கு 9 முறை எஸ்.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 9 முறையும் அவர்கள் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் 150 மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் குற்றம்சாட்டப்படவில்லை. அவர்கள் சாட்சிகள் அல்ல. இதனால் எஸ்.ஐ.டி. விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றார். பின்னர் எஸ்.ஐ.டி. தரப்பில் ஆஜராகி வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.






