சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

இந்தியாவுடன் அரை மின்கடத்தி கட்டமைப்பை ஏற்படுத்த உலக நாடுகள் தயாராக உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் இந்தியா செமிகான் 2025 என்ற திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, உலகளாவிய அரை மின்கடத்தி சூழலியலில், இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்கு பற்றி அவர் சுட்டி காட்டி பேசினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் தாமதத்துடன் இதனை தொடங்கியபோதும், ஒருவராலும் நம்மை தற்போது நிறுத்த முடியாது என்பதும் கூட உண்மை என்றார்.
உலகம் இந்தியாவை நம்புகிறது. இந்தியாவின் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியாவுடன் அரை மின்கடத்தி கட்டமைப்பை ஏற்படுத்த உலக நாடுகள் தயாராக உள்ளன என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், 40 முதல் 50 நாடுகள் பங்கேற்றிருப்பது கூட இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் இளைஞர் சக்தி ஆகியவற்றின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார்.






