தாய், தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன் - உ.பி.யில் பயங்கரம்

மாற்று மத பெண்ணை திருமணம் செய்த காரணத்தால், அம்பேஷை அவரது பெற்றோர் ஏற்காமல் இருந்து வந்துள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(வயது 62). இவரது மனைவி பபிதா(வயது 60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் அம்பேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அவரது பெற்றோர் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி அம்பேஷ், தனது சகோதரிகளில் ஒருவரான வந்தனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தாய், தந்தை இருவரும் காணாமல் போய்விட்டனர் என்றும், அவர்களை தேடுவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. பின்னர் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இதையடுத்து கடந்த 13-ந்தேதி வந்தனா தனது தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகிய 3 பேரையும் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், 14-ந்தேதி அம்பேஷ் மீண்டும் ஜான்பூருக்கு வந்தார். அவரிடம் தாய், தந்தை எங்கே? என உறவினர்கள் அனைவரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் முறையாக பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், அம்பேஷ் திரும்பி வந்தது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். முதலில் தனது பெற்றோர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி வந்த அம்பேஷ், காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணைக்குப் பின் உண்மையை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
முன்னதாக அம்பேஷ் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று மத பெண்ணை திருமணம் செய்த காரணத்தால், அவரையும், அவரது மனைவியையும் ஷியாம் பகதூர் தனது வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார். இதனால் அம்பேஷ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்த பிறகும் கூட அம்பேஷின் பெற்றோர் அவரையும், அவரது மனைவியையும் ஏற்கவில்லை. உனது மனைவியை பிரிந்து வந்துவிட்டால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்கிறோம் என அம்பேஷின் பெற்றோர் அவரிடம் கூறியதாக தெரிகிறது.
இறுதியில் அம்பேஷ் தனது மனைவியை பிரிவது என முடிவு செய்தார். இதை அவரது மனைவியிடம் கூறியபோது, விவாகரத்து செய்வதாக இருந்தால் தனக்கு ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அவரது மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து அம்பேஷ் கடந்த 8-ந்தேதி தனது பெற்றோரிடம் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அம்பேஷ், அம்மிக்கல்லை எடுத்து தனது தாயின் தலையில் அடித்துள்ளார்.
அவரை தடுக்க ஷியாம் பக்தூர் முயன்றபோது, அவரையும் அம்மிக்கல்லை வைத்து அம்பேஷ் பலமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷியாம் பகதூரும், அவரது மனைவி பபிதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரின் உடல்களையும் சாக்குப்பையில் அடைத்து அப்புறப்படுத்த வேண்டும் என அம்பேஷ் திட்டமிட்டுள்ளார். இதற்காக வீட்டில் இருந்த ரம்பத்தை எடுத்து தனது பெற்றோரின் உடல்களை 6 துண்டுகளாக அறுத்த அம்பேஷ், பின்னர் அவற்றை சாக்குப்பைக்குள் வைத்து கட்டி, அதனை கொண்டு போய் ஆற்றில் வீசியுள்ளார்.
இதையடுத்து தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக தனது சகோதரி வந்தனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாய், தந்தையை காணவில்லை என நாடகமாடியுள்ளார். பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவான அவர், ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அம்பேஷ், தனது தாய், தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் கூறியபடி ஆற்றில் வீசப்பட்ட அவரது பெற்றோரின் உடல் பாகங்கள் அடங்கிய சாக்கு மூட்டையை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அதில் சில பாகங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவற்றை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






