புயல் பாதிப்பு; பிலிப்பைன்சுக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா


புயல் பாதிப்பு; பிலிப்பைன்சுக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
x

இந்திய விமான படையின் சி-17 ரக விமானத்தில், 30 டன் எடை கொண்ட நிவாரண பொருட்கள் பிலிப்பைன்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பங்வோங் என்ற சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு அதிக அளவாக 230 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது. ஏற்கனவே கல்மேகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், அதில் இருந்து மீண்டு வருவதற்குள் இந்த புயல் பலத்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.

இதனால், பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி தைவான் மற்றும் ஜப்பான் நாடுகளும் பாதிக்கப்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தின. இதில், பிலிப்பைன்சில் 33 பேர் பலியானார்கள். 52 பேர் காயமடைந்தனர். தைவானில் ஒருவர் பலியானார். 95 பேர் காயமடைந்தனர். அண்டை நாடுகளுக்கு ஆதரவு என்ற கொள்கையின்படி, புயல் பாதித்த பிலிப்பைன்சுக்கு இந்தியா சார்பில் உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான முயற்சிகளுக்காக, இந்திய விமான படையின் சி-17 ரக விமானத்தில், 30 டன் எடை கொண்ட நிவாரண பொருட்கள் பிலிப்பைன்சுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

1 More update

Next Story