பீகார் தேர்தல் களத்தில் வாரிசுகள் ஆதிக்கம்

தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள், ஏற்கனவே அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் மகன்கள், மகள்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.
பாட்னா,
அடுத்த மாதம் நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. வேட்பாளர் பட்டியலை பார்த்தால், இந்த கட்சி, அந்த கட்சி என்ற வேறுபாடு இல்லாமல், ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் பிரபல அரசியல்வாதிகளின் வாரிசுகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளன.
ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவின் இளைய மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். தாராபூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, முன்னாள் மந்திரி சகுனி சவுத்ரியின் மகன் ஆவார்.ரகுநாத்பூரில் போட்டியிடும் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளர் ஒசாமா ஷஹாப், தாதாவாக இருந்து அரசியலில் நுழைந்த முகமது சகாபுதீனின் மகன் ஆவார்.
அதுபோல், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ராஷ்டிரீய லோக் மோர்ச்சாவின் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேகலதா, சசாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்னாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா, ஜன்ஜார்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சியின் மருமகள் தீபா மஞ்சி, இமாம்கஞ்ச் தொகுதியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா வேட்பாளராக நிற்கிறார். மறைந்த சோஷலிஸ்டு தலைவர் கர்பூரி தாக்கூரின் பேத்தி ஜாக்ரிதி தாக்கூர், மோர்வா தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கிர்தாரி பிரசாத் யாதவின் மகன் சாணக்ய பிரசாத் ரஞ்சன், பெல்ஹர் தொகுதியில் ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் களம் காண்கிறார்.லோக் ஜனசக்தி எம்.பி. வீணா தேவியின் மகள் கோமல் சிங், கெய்காட் தொகுதியில் ஐக்கிய ஜனதாதள வேட்பாளராக நிற்கிறார். ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. லவ்வி ஆனந்தின் மகன் சேட்டன் ஆனந்த், நபிநகர் தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் சிவானந்த் திவாரியின் மகன் ராகுல் திவாரி, ஷாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஏ.என்.சின்ஹா சமூகவியல் கல்வி நிறுவனத்தின் பொருளாதார உதவி பேராசிரியர் வித்யார்த்தி விகாஸ் கூறியதாவது:-வாரிசுகள் அரசியலில் நுழைந்திருப்பதை பார்த்தால், எந்த கட்சியும் கொள்கைகள் பற்றியோ, அரசியல் சாசன மாண்புகள் பற்றியோ, ஜனநாயக தத்துவங்கள் பற்றியோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. வாரிசு அரசியலை பொறுத்தவரை எந்த கட்சிக்கும் தார்மீகநெறிமுறை பற்றி பேசத் தகுதி இல்ைல என்று தெரிகிறது. பீகார், கல்வியில் பின்தங்கி இருப்பதே இதற்கு காரணம். பிரபலமான அரசியல் குடும்பங்களில் பிறந்ததால் எளிதாக அரசியலில் நுழைந்தவர்களை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.






