

சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8.20 மணிக்கு ஒரு ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த பக்தர்கள் நாலாபுறமாக சிதறி ஓடினர்.
இதையறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் சன்னிதானம் தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் காலேஷ் குமார், சதீஷ்குமார், பினுகுமார் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் மரம் தீப்பிடித்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விரைவாக செயல்பட்டு தீயை பரவ விடாமல் தடுத்து முற்றிலுமாக அணைத்தனர்.
தீ விரைவாக அணைக்கப்பட்டதால் பக்தர்கள் பெருமூச்சு விட்டனர். இந்த தீ விபத்தையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி 18-ம் படி வழியாக செல்ல சுமார் 30 நிமிடம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் திடீரென தீ எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.