நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு; வர்த்தக பற்றாக்குறை குறைந்தது


நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு; வர்த்தக பற்றாக்குறை குறைந்தது
x

அமெரிக்காவை தவிர்த்து இந்திய பொருட்களுக்கான சந்தையை கண்டெடுத்ததே இந்த மாற்றத்திற்கு காரணம்.

புதுடெல்லி,

இந்தியா உலகின் முக்கியமான ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. விவசாயப் பொருட்கள், மருந்துகள், என்ஜினீயரிங் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், நூல் மற்றும் நகை-ரத்தினங்கள் போன்ற பல துறைகளில் இந்தியா வெளிநாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு வெளிநாட்டு நாணயம் கிடைக்கிறது. இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் உதவுகிறது. மேலும், தொழில்கள் வளர்ச்சி பெற, வேலைவாய்ப்புகள் உருவாக, உற்பத்தி திறன் அதிகரிக்கவும் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சந்தைகளுடன் இந்திய பொருளாதாரம் இணைந்திருப்பதற்கு ஏற்றுமதி ஒரு முக்கிய பாலமாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. நாட்டின் 20 சதவீதம் அளவிலான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. 2023-24 நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி ரூ.7.78 லட்சம் கோடியாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

இதனால் இந்தாண்டு தொடங்கியது முதல் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு சரிந்தது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதி இறக்குமதி இடையேயான வேறுபாடு தொடா்ந்து அதிகரித்து வந்தது. ஏற்றுமதியை காட்டிலும் இந்தியா அதிக மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது.

நேற்று நவம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி-இறக்குமதி விவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தியாவில் மொத்த ஏற்றுமதி கடந்த நவம்பரில் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 910 கோடி (73.99 பில்லியன் டாலர்) ஆனது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த ரூ.5 லட்சத்து 76 ஆயிரத்து 450 கோடியுடன் (64.05 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில் இது 19.37 சதவீதம் உயர்வாகும்.

மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபரில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 120 கோடியாக (41.68 பில்லியன் டாலர்) இருந்தநிலையில் நவம்பரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 770 கோடி (24.53 பில்லியன்) குறைந்துள்ளது. அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை காட்டிலும் இந்தியாவின் ஏற்றுமதி 10 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை தவிர்த்து இந்திய பொருட்களுக்கான சந்தையை கண்டெடுத்ததே இந்த மாற்றத்திற்கு காரணம். குறிப்பாக சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி நடப்பு ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 32.83 சதவீதம் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்த இறக்குமதி ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 670 கோடி (80.63 பில்லியன்) ஆகும். நவம்பர் 2025-ல் மொத்த இறக்குமதி, 2024 நவம்பருடன் ஒப்பிடுகையில் 0.59 சதவீதம் குறைந்துள்ளது.

1 More update

Next Story