‘வாக்குப்பதிவு இயந்திரங்களை அல்ல, மக்களின் இதயங்களை பிரதமர் ஹேக் செய்துவிட்டார்’ - கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சியால் தங்கள் கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க முடியாது என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் பேசியதாவது;-
“நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தினசரி இடையூறுகள் மிகுந்த கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. அவர்களின் செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எம்.பி.க்கள் ‘எஸ்.ஐ.ஆர்.’ குறித்து தொடர்ந்து கூச்சலிட்டனர், மிரட்ட முயன்றனர். அவையின் நடத்தைகளை மீறி நடந்து கொண்டனர்.
அவர்களின் இடையூறுகள் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்தன. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களைத் தவிர, அவர்கள் அவையை நடத்தவே விடவில்லை. நாம் மக்களின் பிரதிநிதிகள். குறிப்பாக புதிய எம்.பி.க்கள் இங்கு நிறைய கற்றுக்கொள்ள வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் தோல்விகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை. மாறாக, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அது காலாவதியான நடைமுறை ஆகிவிட்டது.
அரியானா தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் காட்டுகிறார்கள். அந்த பெண், இதுவரை இந்தியாவிற்கு ஒருமுறை கூட வந்தது இல்லை என்றும், தனக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கமளித்துவிட்டார்.
ஆனால் இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவையில் காட்டுகிறார்கள். நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி திட்டம், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மத்திய அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
கடந்த காலத்தை பா.ஜ.க. அரசு விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் தங்கள் கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க முடியாது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்திய குடியுரிமையை பெறுவதற்கு முன்பே இந்திய தேர்தலில் வாக்களித்தார். பிரியங்கா காந்தி கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






