கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
புதுடெல்லி,
கேரளாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து 24 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த வரைவு வாக்காளர் பட்டியல் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் நீக்கப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதற்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களும் வெளியிடப்படவில்லை என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கோர்ட்டில் வாதிட்டனர்.
இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட தேர்தல் கமிஷனை நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முறையீட்டை தெரிவிப்பதற்கு வசதியாக மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்க பரிந்துரைக்கவும் கேட்டுக்கொண்டனர்.






