மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்

மணிப்பூரில் இன்று ஒரே நாளில் ரிக்டர் 5.2, 2.5, 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.54 மணியளவில் (இந்திய நேரப்படி) இன்று ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனையடுத்து இரண்டாவது முறையாக காலை 2.26 மணியளவில் ரிக்டரில் 2.5 அளவிலும், மூன்றாவது முறையாக காலை 10.23 மணியளவில் ரிக்டரில் 3.9 அளவிலும் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மணிப்பூரின் சூரசந்த்பூர் பகுதியில் இருமுறையும், நோனி பகுதியில் ஒரு முறையும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






