மராட்டியத்தில் சோகம்; கார்-மோட்டார் சைக்கிள் மோதலில் 7 பேர் பலி

விபத்தில் சிக்கிய 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் திண்டோரி நகரில் நேற்றிரவு 11.57 மணியளவில் கார் ஒன்று வாணி-திண்டோரி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார், மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது.
இதில், 2 வாகனங்களும் சாலையோரம் இருந்த சிறிய கால்வாயில் கவிழ்ந்துள்ளன. தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் சென்றபோது, கால்வாயில் கிடந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் காயங்களுடன் காணப்பட்டனர்.
அவர்களை மீட்கும் பணி நடந்தது. எனினும், இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியானார்கள். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை போலீசார் இன்று தெரிவித்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






