காஷ்மீரில் மலையேற்றத்திற்கு தடை - மாநில அரசு அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் மலையேற்றம் என்பது ஒரு அற்புதமான சாகச அனுபவமாகும். இந்த பிராந்தியத்தில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில், பலவிதமான மலையேற்றப் பாதைகள் உள்ளன, அவை அனைவரின் திறமைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மலையேற்றத்திற்கு பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதால் மலையேற்றத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.






