புலிக்கு மது கொடுப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல்

புலிக்கு மது கொடுக்கும் ஏ.ஐ. போலி வீடியோ தொடர்பாக மும்பை வாலிபருக்கு நோட்டீஸ் அனுப்பி போலீஸ் எச்சரிக்கை
புலிக்கு மது கொடுப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல்
Published on

 நாக்பூர்,

ஏ.ஐ. தொழிநுட்பம் நாளுக்கு நாள் நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் வளர்ந்து வருகிறது. இதனை சரியான விதத்தில் பயன்படுத்தி பலரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றனர். ஆனால் மறுபுறம் சிலர் தவறான நோக்கத்தில் பயன்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் புலிகள் காப்பகம் அருகே இரவு நேரத்தில் 52 வயது டிப்-டாப் ஆசாமி ஒருவர் மூக்கு முட்ட மது குடித்துவிட்டு செல்கிறார்.

திடீரென அவர் செல்லும் சாலையில் புலி ஒன்று வழிமறித்து நிற்கிறது. புலியை கண்டால் அஞ்சி ஓடுபவர்களுக்கு நடுவே அந்த நபர் அச்சமின்றி புலியை பார்க்கிறார். மில்லி உள்ளே போனால் போதும் கில்லி வெளியே வருவான் பாரு என்ற சினிமா பாடல் வரிக்கு சொந்தகாரர் போல் அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை வெளியே எடுக்கிறார். பின்னர் புலியிடம் சென்று அதன் தலையை தடவி கொடுத்து அதற்கு மதுவை கொடுக்கிறார். வெறும் 6 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதைக்கண்டு வனத்துறையினரும், சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் வீடியோவில் உள்ள காட்சிகள் போலி எனவும் அவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த வீடியோவை கடந்த மாதம் 30-ந் தேதி மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது;-

"இந்த போன்ற ரீல் மக்களிடம் தவறான செய்திகளை கொண்டு போய் சேர்க்கிறது. மேலும் புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கிறது. இது சுற்றுலா பயணிகளிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும். இது காட்டு விலங்குகளுக்கு எதிரான தவறான நடவடிக்கையையும் காட்டுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நாக்பூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஹர்ஷ் போடார் மற்றும் கூடுதல் எஸ்பி அனில் மாஸ்கே ஆகியோர் பாரதிய நாகரி சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 68-ன் கீழ் மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். நாக்பூர் கிராமப்புற காவல்துறையினர் குடிமக்களிடம் இதுபோன்ற போலி உள்ளடக்கத்தை பகிர்வதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், மேலும் வனவிலங்கு சரணாலயங்களை அவதூறு செய்யும் அல்லது தவறான தகவல்களை பரப்பும் ரீல்களை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com