8-வது ஊதியக் குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு ஜனவரி, 2025 இல் அறிவித்தது. அதன்படி, 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்த்துள்ளது.
8 வது ஊதிய குழு தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் உறுப்பினராக, ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலாக் கோஷ் (பகுதி நேர) மற்றும் தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும், மேலும் இந்த அமலாக்கம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






