கேரளாவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா 11-ந்தேதி வருகை

கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை அமித்ஷா சந்தித்து பேசுகிறார்.
கொச்சி,
கேரளாவில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 11-ந்தேதி கேரளாவுக்கு வருகை தரவுள்ளார். கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இதுபற்றி குறிப்பிடும்போது, மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா, வருகிற ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திற்கு வருகை தந்து, கேரள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உள்ளிட்ட பணிகளை தொடக்கி வைக்கிறார் என கூறியுள்ளார்.
இதன்படி கேரளா வரும் மந்திரி அமித்ஷா, காலையில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதுடன் பூஜையிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதன்பின்னர், கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
இதன்பின்பு, மதியம் கூட்டம் ஒன்றில் பங்கேற்கிறார். அன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.






