உத்தர பிரதேசம்: பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய மந்திரி


உத்தர பிரதேசம்:  பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய மந்திரி
x

காரின் ஓட்டுநர் உடனடியாக காரை வேறு பக்கம் திருப்பி பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார்.

பிரோசாபாத்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறைக்கான மந்திரி பேபி ராணி மவுரியா கலந்து கொண்டார்.

இதன்பின்னர் அவர் லக்னோ நோக்கி நேற்றிரவு புறப்பட்டார். அவருடைய கார் பிரோசாபாத் மாவட்டத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றின் டயர் ஒன்று திடீரென வெடித்துள்ளது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, மந்திரியின் காரை நோக்கி வந்தது. அது காரின் மீது மோதியது. எனினும், உடனடியாக காரின் ஓட்டுநர் வேறு பக்கம் காரை திருப்பி பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார்.

இந்த விபத்தில் கார் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், காயம் எதுவுமின்றி மந்திரி பேபி ராணி உயிர் தப்பினார். இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மந்திரி, லக்னோவுக்கு வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருவழிகளில் செல்லாமல், ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன. இந்த சூழலில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மந்திரி பேபி ராணி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அதிகாரிகளும் பாதுகாப்பு விதிகளை சீராய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story