வாக்கு திருட்டு: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்-சித்தராமையா

வாக்குகள் திருட்டு அம்பலமாகி உள்ளதால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கிளை அலுவலகமாக மாறிவிட்டது. வாக்குகள் திருட்டுக்கு எதிராக கர்நாடகத்தில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவும். ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆராய்ந்து உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளார். தேர்தல் ஆணையம் அரசியல் சாசனப்படி நடந்து கொள்ள வேண்டும்.அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாக்குரிமையை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. அதற்கு நாட்டு மக்கள் வாய்ப்பு வழங்க மாட்டார்கள்.
இவர்கள் அரசியல் சாசனத்தை தவறான பாதைக்கு இழுக்கிறாா்கள். மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற வாக்குகள் முறைகேட்டால் பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அங்கு மக்களின் ஆதரவு காங்கிரசுக்கு இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் வாக்குகள் திருட்டால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்த பிறகு வாக்குகள் திருடப்படுவது குறித்து உரிய ஆதாரங்களுடன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவரது இந்த போராட்டத்திற்கு கர்நாடக மக்கள் ஆதரவாக நிற்பார்கள். வாக்குகள் திருட்டு அம்பலமாகி இருப்பதால் பிரதமர் மோடி ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






