‘கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெற முடியும்’ - விஜய்க்கு பவன் கல்யாண் யோசனை

தனித்து போட்டியிட்டால் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
அமராவதி,
த.வெ.க. தலைவர் விஜய்யும், ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணும் நண்பர்கள். கரூர் நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி மூலமாக பேசிக்கொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அப்போது பவன் கல்யாண், ‘சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட்டால் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும். ஆனால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெற்று தமிழக துணை முதல்-அமைச்சராகி மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதற்கு அடுத்த தேர்தலில் தனித்து களம் இறங்கி முதல்-அமைச்சராக முடியும்’ என்று அவர் யோசனை கூறியதாக தெரிகிறது.
பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி, ஆந்திராவில் தனித்து போட்டியிட்டார். ஆனால் அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் கட்சியை காங்கிரசில் இணைத்து விட்டார். எனவே சினிமாவில் உச்சத்தை அடைந்த அனைவரும் அரசியலில் வெற்றி காண முடியாது என்று பவன் கல்யாண் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.






