மேற்கு வங்காளம்: வன்முறைக்கு பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு; மம்தா பானர்ஜி அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை. அவர்களுடைய வலியை பார்க்கிறோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.
வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர்.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், போலீஸ் வாகனங்கள் 5 தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. சிறை வேன் ஒன்று சூறையாடப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்து உள்ளார்.
அவர் கொல்கத்தா நகரின் நேதாஜி உள்ளரங்கத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, இதுபற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தலைமை செயலாளரிடம் கேட்பேன். பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை. அவர்களுடைய வலியை பார்க்கிறோம் என்றார்.
வீடுகளை இழந்தவர்களுக்கு, அரசு செலவிலான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும். சேதமடைந்த கடைகள் பற்றி தலைமை செயலாளர் மதிப்பீடு செய்வார். இதன்பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணிகள் செய்து முடிக்கப்படும் என கூறியுள்ளார்.






