விமான விபத்துக்கு காரணம் என்ன? நிபுணர்கள் கருத்து

விமானம் புறப்பட்டபோது எழுந்த தூசிகளை பார்த்தால் இரட்டை என்ஜின் பிரச்சினையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆமதாபாத்,
ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து, பயணிகள் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த விமானிகள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விமான விபத்து தொடர்பான 2 வீடியோக்களை பார்த்து அவர்கள் இந்த கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
1. விமானத்தின் 'லேண்டிங் கியர்' சாதனம் ஏன் பழைய நிலைக்கு கொண்டுவரப்படவில்லை?
2. விமானத்தின் இரட்டை என்ஜின் செயல் இழந்துவிட்டதா?
எரிபொருள் கலப்படம்
3. எரிபொருள் கலப்படம் அல்லது அடைப்பு காரணமாக, என்ஜின்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டதா?
4. விமானத்தின் இறக்கையில் உள்ள 'பிளாப்ஸ்' கருவி, விமானம் மேலே எழுவதற்காக கீழே இறக்கப்பட்டதா?
மேற்கண்ட கேள்விகளை அவர்கள் எழுப்பி உள்ளனர்.
மேலும், விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித்சிங் கூறியதாவது:-
விமானம் மேலே எழும்பிய 5 வினாடிகளுக்குள் பொதுவாக விமானிகள் 'லேண்டிங் கியர்' சாதனத்தை மேலே தூக்கி விடுவார்கள். ஒருவேளை விமானிகளுக்கு ஏதேனும் கவனச்சிதறல் ஏற்பட்டு இருந்தால், அதை செய்ய மறந்திருக்கலாம்.
இரட்டை என்ஜின் கோளாறாலோ அல்லது பறவை மோதியதாலோ அதைச் செய்ய மறந்திருக்கலாம்.
விமானம் புறப்பட்டபோது எழுந்த தூசிகளை பார்த்தால் இரட்டை என்ஜின் பிரச்சினையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏர் இந்தியா முன்னாள் அதிகாரி கேப்டன் ஹதி சிங், ''லேண்டிங் கியர்' மேலே எழாததற்கு இரட்டை என்ஜின் கோளாறுதான் காரணமாக இருக்கலாம்'' என்று கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத சில விமானிகள், இரட்டை என்ஜின் கோளாறு அல்லது எரிபொருள் கலப்படம் காரணமாக இருக்கலாம் என்று கூறினர்.






