தமிழகத்தில் நவம்பரில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்


தமிழகத்தில் நவம்பரில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்
x

இந்தியா முழுவதும் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்திலேயே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், இம்முறை இயல்பை விட அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களிலும், தென்காசி, தேனி, திருநெல்வேலி போன்ற மலைப்பகுதி மாவட்டங்களிலும் கடந்த சில வாரங்களில் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடை, மரங்கள் சாய்வு, வீடுகள் சேதம் போன்ற சில அசாம்பாவிதங்கள் ஏற்பட்டன.

இதற்கிடையில், சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான “மோந்தா” புயல் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் மழை கொடுத்தது எனினும், பின்னர் அந்த புயல் ஆந்திரா கடற்கரை வழியாக நிலப்பரப்பை கடந்ததால், தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது வெள்ளம் ஏற்படவில்லை.

இந்த புயலுக்குப் பிறகு, சில நாட்களாக தமிழகத்தில் மழை விகிதம் குறைந்தது. இதனால் வானிலை ஆய்வாளர்கள் பலரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் மழை தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்த்தனர். குறிப்பாக, தனியார் வானிலை ஆய்வாளர்கள் நவம்பர் 7 முதல் 17 வரை புதிய புயல் உருவாகி, தமிழகத்தில் கடும் மழையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் நவம்பரில் மழைக்கு வாய்ப்பா?

இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில்,

நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவான மழை பதிவாகும். வங்கக்கடலில் தற்போது புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதையும், காற்றழுத்த மாற்றங்கள் மிதமாக உள்ளதையும் வானிலை மையம் விளக்கியுள்ளது.

வானிலை மையத்தின் தரவின்படி, நவம்பர் மாதம் முதல் 15 நாட்களில் தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை, சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை ஏற்படலாம். ஆனால் பரவலான கனமழை நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மழை குறைவாக இருப்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அரசு துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் ஆதாரங்களைச் சேமித்து வைக்கவும், பயிர் மாற்றுத் திட்டங்களைப் பின்பற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மழை குறைவாக இருந்தாலும், வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்பதால், திடீர் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக வானிலை மையம் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக பதிவாகும். மற்ற மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story