வீட்டில் தனியாக இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வாடா தாலுகா பகுதியில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இரவு பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பெண்ணுக்கு தெரிந்த ஒரு நபர் வீட்டுக்கு வந்தார். அவர் அந்தப்பெண்ணை அவரது கணவர் கூப்பிடுவதாக ஊர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது மற்றொரு நபரும் அங்கு வந்தார். 2 பேரும் திடீரென அந்தப்பெண்ணை அங்கு இருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று 2 பேரும் பெண்ணை மாறி மாறி வன்கொடுமை செய்தனர். பின்னர் அங்கு இருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வாடா போலீசில் புகார் அளித்தார். இந்தப்புகார் குறித்து கூட்டு வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே பெண்ணை வன்கொடுமை செய்த விகாஸ் சஞ்சய் முக்னே என்ற டக்லியாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






