மனைவியை 45 முறை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு

பிரேத பரிசோதனையில் மஞ்சுவை அவரது கணவர் 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
பெங்களூரு,
துபாயில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ரமேஷ். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி மஞ்சு. இவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தையில்லை. திருமணத்திற்குப் பிறகு ரமேஷ் துபாய் சென்ற நிலையில், அவரது மனைவி மஞ்சு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
பெங்களூரு உல்லால் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மஞ்சு வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். சமீபத்தில் ரமேஷ் தனது மனைவியை காண விடுமுறையில் பெங்களூருவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களின் வீட்டுக் கதவு வெகு நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சுவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மஞ்சுவின் தந்தை, தன்னிடம் மகள் கொடுத்த உதிரி சாவியை பயன்படுத்தி கதவை திறக்க உள்ளே அதிர்ச்சி காத்திருந்தது. கத்தியால் குத்துபட்ட நிலையில் மஞ்சு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதன் அருகில் மின் விசிறியில் தூக்கு மாட்டி ரமேசும் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெங்களூரு போலீசார், ரமேஷ் மற்றும் மஞ்சுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மஞ்சுவை கொலை வெறியுடன் அவரது கணவர் 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் மஞ்சுவை கொலை செய்துவிட்டு, அவரது கணவர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இருவரின் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






