காளி பூஜை பண்டிகையின்போது ஸ்பீக்கரை ஆப் செய்த இளைஞர் குத்திக்கொலை

தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாவட்டம் தெற்கு பர்கானாஸ் மாவட்டம் சோனர்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சனாதன் நஸ்கர் (வயது 35). இவர் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஸ்பீக்கர், லைட் போன்ற சாதனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார்.
இதனிடையே, சோனர்பூர் கிராமத்தில் காளி பூஜை பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் சனாதனிடம் வாடகைக்கு ஸ்பீக்கர் வாங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களாக ஸ்பீக்கரில் பாட்டு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காளி பூஜை பண்டிகையின்போது கடந்த 3 நாட்களாக ஸ்பீக்கரில் பாட்டு போடப்பட்டது குறித்து கிராமத்தினர் சிலர் சனாதனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, சனாதன் நேற்று இரவு ஸ்பீக்கரை ஆப் செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பாட்டு போடப்படாததால் ஆத்திரமடைந்த ஸ்பீக்கரை வாடகைக்கு எடுத்த சிலர் சனாதனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த கும்பலை சேர்ந்த நபர் சனாதனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சனாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சனாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்டு சஹா, அவரது மனைவி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.மேலும், தலைமறைவான 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






