தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புதுச்சேரி

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பெண் கொலை

வில்லியனூர் அருகே கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவர் கடந்த 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி தவளக்குப்பம் நல்லவாடு கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சாந்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

விசாரணையில் சாந்திக்கும், சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த தொழிலாளி பூபாலனுக்கும் (48) இடையே பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக சென்று சாராயம் குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று நல்லவாடு கடற்கரையில் சாராயம் குடித்தபோது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பூபாலன், சாந்தியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பூபாலனை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி 3-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பூபாலனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்ககூடும் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் வாதாடினார்.


Next Story