108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை போராட்டம்


108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை போராட்டம்
x

புதுச்சேரி சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை புதுவை அரசு டிரைவர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். மாதத்தில் முதல் நாள் சம்பளம் வழங்க வேண்டும். ஆம்புலன்சுகளில் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ விடுப்பு உள்ளிட்டவை வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து புதுவை சட்டசபை அருகே உள்ள சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருநாள் வேலை நிறுத்தம்

போராட்டத்தை சங்க கவுரவ தலைவர் சேஷாச்சலம் தொடங்கி வைத்தார். தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். புதுவை அரசு டிரைவர் சங்க தலைவர் விச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் முருகன், லூர்து மரியநாதன், பிரபாகரன், பாபு மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த போராட்டம் வருகிற 11-ந் தேதி வரை தொடரும் என்றும், 11-ந் தேதியன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதேபோல் காரைக்காலில் உள்ள நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story