சூடானில் புதுச்சேரியை சேர்ந்த 16 பேர் சிக்கி தவிப்பு

உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த 16 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி
உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த 16 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
உள்நாட்டு போர்
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு வசிக்கும் வெளிநாட்டினர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகிறது.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள், 'ஆபரேஷன்' காவேரி மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த 16-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களை மீட்க, அவரது உறவினர்கள் புதுவை கவர்னர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மந்திரிக்கு கடிதம்
இந்த நிலையில் சூடான் நாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை மீட்க உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வெளியுறவு அமைச் சகத்தின் முயற்சி வரவேற்கதக்கது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோல் சூடானில் சிக்கி இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அனைவரையும் மீட்டு புதுச்சேரிக்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். உங்களின் நடவடிக்கை புதுச்சேரி மக்களுக்கு நிம்மதி மற்றும் நம்பிக்கையை தரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.