கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x

புதுவையில் குறி வைத்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 9 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்குளம்

புதுவையில் குறி வைத்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 9 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சமூக வலைதளத்தில் வைரல்

புதுச்சேரியில் சாலையோரம், கடை வீதிகள், பூங்கா மற்றும் வீடு அருகே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன. அதிலும் குறி வைத்து புத்தம் புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

கடந்த 10 நாட்களில் 25-க் கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதையடுத்து உஷாரான போலீசார், குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

2 பேர் சிக்கினர்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் சிதம்பரம் கே.என்.தோட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 19), கடலூர் உசுப்பூர் நாயகபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற தமிழரசன் (19) என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இவர்களில் தமிழரசன் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுவையில் மேலும் 8 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்தது உள்பட மொத்தம் 9 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story