கார் திருட்டு வழக்கில் 3 பேர் கைது


கார் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
x

புதுவையில் கார் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய காரை போலி பதிவெண் பொருத்தி பயன்படுத்தியது அம்பலமானது.

புதுச்சேரி

புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 31). தனியார் நிறுவன மேலாளர். இவருக்கு சொந்தமான புதிய காரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் திருட்டு போன காரை போலி பதிவெண் பயன்படுத்தி காஞ்சீபுரம் மாவட்டம் இடங்கரையை சேர்ந்த சந்திரசேகர் (38) என்பவர் பயன்படுத்தியதும், அதனை மதுபானம் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் காஞ்சீபுரம் சென்று சந்திரசேகரனை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் சந்திரசேகரனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆட்டோ டிரைவர்களான பூமியான்பேட்டை பவளநகரை சேர்ந்த மோகன்ராஜ் (37), கடலூர் மாவட்டம் சிங்கிரி கோவிலை சேர்ந்த பொன்னுசாமி (50) ஆகியோர் காரை திருடி சந்திரசேகரனுக்கு ரூ.1½ லட்சத்திற்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோகன்ராஜ், பொன்னுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ரெட்டியார்பாளையம் குற்றப்பிரிவு போலீசாரை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் பாராட்டினார்.


Next Story