4 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை

புதுவையை அடுத்த அரியாங்குப்பத்தில் பொதுஅமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய நான்கு ரவுடிகளை ஊருக்குள் நுழைய தடைவிதிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம்
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் மாஞ்சாலை சிவன்கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 25). மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் சார்லஸ் (35). ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் ஊருக்குள் இருந்தால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படும், எனவே அவர்கள் 2 பேரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் பரிந்துரை செய்துள்ளார்.
இதேபோல் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்த ரவுடி பாலச்சந்தர் (24), டி.என். பாளையம் உடையார் தெருவை சேர்ந்த விஜயகுமார் (23) ஆகியோரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






