ஒரு மாதத்தில் 50 புதிய பஸ்கள் வாங்கப்படும்


ஒரு மாதத்தில் 50 புதிய பஸ்கள் வாங்கப்படும்
x

புதுவையில் ஒரு மாதத்தில் 50 புதிய பஸ்கள் வாங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி

புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் சாலைப்போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருக்குமரன், ஐ.என்.டி.யு.சி. குமரவேல், ஓட்டுனர், நடத்துனர் சங்க தலைவர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கு பணி வழங்கவேண்டும். 15 ஆண்டு ஓடிய 22 பழைய பஸ்கள் நிறுத்தப்பட்டதற்கு பதில் மாற்று பஸ்களை உடனடியாக வாங்கி இயக்கவேண்டும். புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கவேண்டும், மாதந்தோறும் சம்பளம் வழங்கவேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்கவேண்டும், 9 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணி செய்பவர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் சந்திர பிரியங்கா, இன்னும் 15 நாட்களுக்குள் பேட்டரி பஸ்கள் வாங்கப்படும் என்றும், 50 புதிய பஸ்கள் ஒரு மாதத்தில் வாங்கி புதிய வழித் தடத்தில் இயக்கப்படும் என்றும் ஊழியர்களின் சம்பளத்தை மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


Next Story